மும்பையில் ஸ்டுடியோவை இடித்தது சட்டப்படியான செயல்தான்: கங்கனா ரனாவத் விளக்கம்


மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தரக்குறைவாகப் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டியவர் என்ற ரீதியில் தரக்குறைவாக நடிகர் குணால் கம்ரா பேசினார். இதையடுத்து கம்ராவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. அவர் பேசிய ஸ்டுடியோவை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் குணால் கம்ராவுக்கு, நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குணால் கம்ரா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரி என்றும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மும்பையில் எனக்கு சொந்தமான கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். அது சட்டவிரோதமான விஷயம். இதுதொடர்பாக அப்போதே நான் வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால், நடிகர் குணால் கம்ராவின் பேச்சு சர்ச்சைக்குரியது. அவரை நான் கண்டிக்கிறேன். அவர் மீது போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் சட்டப்படியானவை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக, யாரை வேண்டுமானாலும் இழித்துப் பேசுவது சரியல்ல. நீங்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவரை மோசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தி உள்ளீர்கள். அவர் செய்த வேலையை இழிவாகப் பேசியுள்ளீர்கள். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இன்று அவர் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். வாழ்க்கையில் எதையுமே சாதிக்காத குணால் கம்ரா பேசுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் நகைச்சுவை என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்கிறார். 2 நிமிட புகழ்ச்சிக்காக இதைச் செய்கின்றனர். நமது சமூகம் எங்கே செல்கிறது?” என்றார்

x