நடிகை பாவனா விளக்கம்: நடிகை பாவனா கடந்த 2018-ம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அவர் தனது கணவரைப் பிரிவதாக வதந்திகள் பரவின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பாவனா.
“என்னைப் பற்றி பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் எனது கணவருடன் நான் இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை. எனது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று பாவனா தெரிவித்துள்ளார்.
‘கிங்டம்’ இரு பாகங்கள்: நாக வம்சி மற்றும் சாய் செளஜான்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிங்டம்’. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்துள்ளார். இதன் ஒளிப்பதிவாளர்களாக ஜோமன் டி ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் மே 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், “கிங்டம் படத்தில் பிரம்மாண்டம், திரைக்கதை, சண்டைக் காட்சிகள் என அனைத்துமே இருக்கும். முதல் பாகத்தின் வெற்றியை வைத்து 2-ம் பாகம் முடிவு செய்யப்படும். ‘கிங்டம் ஸ்கொயர்’ அல்லது ‘கிங்டம் பாகம் 2’ என பெயரிடலாம் என இருக்கிறோம்” என்று நாக வம்சி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ‘கிங்டம்’ டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது கவனிக்கத்தக்கது.
ஏப்.18-ல் ‘சச்சின்’ ரீரிலீஸ்: மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சச்சின்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இப்படம் ஏப்ரல் 18-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. அதிகப்படியான திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் தாணு.
சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்பட மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விஜய் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் ‘பகவதி’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கத்தக்கது.
மீண்டும் பாலிவுட்: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக ‘ரகு தாத்தா’ படம் வெளியானது. அதையடுத்து, ‘ரிவால்வர் ரீட்டா’ உட்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையில் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், மேலும் ஒரு இந்தி படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமான இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்தியில் ‘பெருசு’ - மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற தமிழ்ப் படம் ‘பெருசு’. வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடிப்பில் இளங்கோ ராம் இயக்கிய இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ளனர். சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை வெளியீட்டிற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது. இதனால், இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபமே கிடைத்திருக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் விற்கப்பட்டு இருக்கிறது. ‘பெருசு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையினை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியில் யார் இயக்கவுள்ளார், யார் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.