சென்னை: ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கல்லூரி பின்னணி கதையில் உருவாகும் இப்படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்தின் மூலம் இணைய சென்சேஷன் ஆன கயாடு லோஹர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முன்னணி நட்சத்திர படம் இதுவே ஆகும். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் சிம்புவும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சந்தானமும் நடிக்கின்றனர்.
‘கல்கி 2898 ஏடி’ 2 -ம் பாகம் அப்டேட்: நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தில் யாஷ்கின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் கமல். அவருடைய அறிமுகத்துடன் முதல் பாகம் இருக்கும். தற்போது 2-ம் பாகத்தில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் எப்படி கமலை எதிர்கொள்கிறார்கள் என்று இருக்கும் எனத் தெரிகிறது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் குறித்து அதன் இயக்குநர் நாக் அஸ்வின் கூறும்போது, “டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் கதாபாத்திரங்களின் முன்கதைகள் கூறியதால் பிரபாஸின் காட்சிகள் குறைவாக இருந்திருக்கும். முன்கதைகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டதால், இனி நடக்கப் போவது மட்டுமே இருக்கும். ஆகையால், இரண்டாம் பாகம் முழுக்கவே பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் கதாபாத்திரங்களை முன்வைத்து இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஓடிடியில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ - தனுஷ் இயக்கத்தில் பிப்ரவரி 22-ல் வெளியான படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமான இப்படத்தில் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மார்ச் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஓடிடியில் ‘டிராகன்’ ரிலீஸ்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து பிப்ரவரி 21-ல் வெளியான படம் ‘டிராகன்’. விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் நாயகி கயாடு லோஹர் இணைய சென்சேஷன் ஆனார். இந்நிலையில், இப்படம் வரும் 21-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் காணக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வரி’ நாயகர்கள்: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
82 வயதிலும் பாலிவுட்டில் கலக்கி வரும் அமிதாப் பச்சன் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.350 கோடியை வருமானமாகப் பெற்று, இதற்காக ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக இருக்கிறார் அமிதாப் பச்சன். 2024-25-ம் நிதியாண்டை பொறுத்தவரையில் நடிகர் விஜய் ரூ.80 கோடியும், சல்மான் கான் ரூ.75 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.