சாய்ரா பானு கோரிக்கை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நீர்ச்சத்து குறைபாட்டால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனிடையே, ரஹ்மானின் இணையர் சாய்ரா பானு வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று கவனம் ஈர்த்தது. அதில், ஊடகங்கள் தன்னை ஏ.ஆ.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், “இறைவனின் அருளால், அவர் (ரஹ்மான்) இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இன்னும் கணவன் மனைவிதான். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பிரிந்திருக்கிறோம். தயவுசெய்து முன்னாள் மனைவி என்று சொல்லாதீர்கள்” என்று சாய்ரா பானு கூறியுள்ளார்.
குஷ்பு தயாரிக்கும் படம்: குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியாவின் ஆர்.மதன் குமார் இணைந்து ஃபேன்ட்ஸி ரொமான்ஸ் காமெடி படத்தைத் தயாரிக்கின்றனர். இதை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம்வயது ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடிக்கிறார். சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.
‘எம்புரான்’ ரிலீஸ்: லைகா நிறுவனம் தொடர்புடைய தயாரிப்பு விவகாரச் சிக்கல்களைச் சந்தித்து வந்த ‘எம்புரான்’ படக்குழு அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்துவிட்டது. இப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இதன் இரண்டாம் பாகம்தான் ‘எம்புரான்’. முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே இதிலும் நடித்துள்ளனர். அவர்களோடு சில முன்னணி நடிகர்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நானி அண்ட் கோ ஹேப்பி: நடிகர் நானி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கோர்ட் - எ ஸ்டேட் Vs எ நோபடி’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராம் ஜெகதீஷ் இயக்கிய இந்தப் படத்தில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்றிருப்பது நானி டீமுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
‘பாஸ் (எ) பாஸ்கரன்’ ரீரிலீஸ்: 2010-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காமெடி படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. இப்படம் மார்ச் 21-ம் தேதி திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படுவதாக என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.