பெங்களூரு: கர்நாடகாவையும் கன்னட திரையுலகையும் புறக்கணிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா கனிகா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மண்டியா தொகுதி எம்எல்ஏ ரவிகுமார் கவுடா கனிகா கூறும்போது, “நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது பிற மொழிகளில் நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். ஆனால், அவர் தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்துவிட்டார். கடந்த பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர் அதில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
‘என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. பெங்களூருவில் எனக்கு வீடு இல்லை. அங்கே எனக்கு யாரையும் தெரியாது. அங்கு என்னால் தனியாக வந்து செல்ல முடியாது’ என ராஷ்மிகா மறுத்து விட்டார். சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் சென்று அழைப்பு விடுத்தும், அவர் அதனை மதிக்கவில்லை. கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்துவிட்டார். அவருக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் வாரிசு, சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். புஷ்பா தெலுங்குப் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.