ஒரே படத்துக்காக ஒருவருக்கே 4 ஆஸ்கர் விருதுகள் - சீன் பேக்கர் சாதனை!


ஒரே படத்துக்காக, 4 ஆஸ்கர் விருதுகளை ஒருவரே வென்று சாதித்துக் காட்டியுள்ளார் ‘அனோரோ’ படத்தின் இயக்குநர் சீன் பேக்கர். ஒரே படத்துக்காக ஒருவரே நான்கு ஆஸ்கர் விருதுகள் வெல்வது இதுதான் முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா நடந்தது. இதில், பாலியல் தொழிலாளியின் காதலைப் பேசிய ‘அனோரா’ படம், 5 விருதுகளை வென்றது.

சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது. ஒரே படத்துக்காக, 4 ஆஸ்கர் விருதுகளை ஒருவரே (சீன் பேக்கர்) வெல்வது இதுதான் முதல் முறை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

‘த புரூட்டலிஸ்ட்’ திரைப்படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் (அட்ரியன் ப்ரோடி), சிறந்த ஒரிஜினல் இசை (டேனியல் ப்ளூம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லால் கிராலே) ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது. பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் டெல்லியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா' என்ற குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.

சீன் பேக்கர் பேசியது என்ன? - ஆஸ்கர் மேடையில் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சீன் பேக்கர், “ஒரு சுயாதீனப் படத்தை அங்கீகரித்ததற்காக அகாடமி வாக்காளர்களுக்கு நன்றி. நாம் திரையரங்குகளில் படம் பார்த்துதான் அதன் மீது காதல் கொண்டோம். பார்வையாளர்களுடன் அங்கு படம் பார்ப்பது சிறந்த அனுபவம். இப்போது அந்த அனுபவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

பல திரையரங்குகள் பார்வையாளர்கள் இன்றி போராடி வருகின்றன. அவர்களை ஆதரிப்பது நம் கையில் தான் இருக்கிறது. திரையரங்குகளுக்காகப் படங்கள் எடுங்கள். விநியோகஸ்தர்களே என் படங்களை முதலில் திரையரங்குகளில் வெளியிடுங்கள்” என்றார் சீன் பேக்கர்.

x