‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், லைலா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சப்தம்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் பார்வை இது...
மூணாறு தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ள பேய்தான் காரணமா என்ற கேள்வியுடன், அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தைக் கண்டறிய பணிக்கப்படும் ‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ ஆதியின் விசாரணையையும், மர்ம முடிச்சிகளையும் திரைக்கதையாக அமைத்திருப்பது ப்ளஸ்.
‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ குறித்தும், சப்தங்களை டீகோடிங் செய்வதுமான ஆரம்ப காட்சிகள், ஆதியின் விசாரணை, கல்லூரி விரிவுரையாளர் லட்சுமி மேனனுடன் நெருக்கம் என வேகமெடுக்கும் முதல் பாதியும் முக்கிய ப்ளஸ்.
இரண்டாம் பாதியில் கல்லூரியின் பழம்பெரும் நூலகக் கட்டிடம் நோக்கி நகரும் கதையும், அங்கே வெளிப்படும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் நடக்க, உயிரைக் கொல்லும் இரைச்சலாகவும், உயிரை வளர்க்கும் ‘இசை’யாகவும் சப்தத்துக்குக் இரு பரிமாணங்களைக் காட்டிய விதம் ப்ளஸ். ஆனால், ‘ஹாரர்’ தன்மைக்காக திணிக்கப்பட்ட சூனியக்காரி கதாபாத்திரம் முதலான அம்சங்கள் மைன்ஸ்.
தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஆதி நேர்த்தியான நடிப்பை வழங்கியது ப்ளஸ். ரெடின் கிங்ஸ்லி பெரிதாக மேஜிக் செய்யாததும், துணைக் கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லாததும் மைனஸ். தேர்ந்த நடிப்புடன் கூடிய லட்சுமி மேனனின் முக்கியக் காட்சிகள், சிம்ரனின் பங்களிப்பு முதலானவை ப்ளஸ்தான் என்றாலும், ‘வெயிட்’டான கதாபாத்திரத்துக்கு லைலா வலு சேர்க்காதது மைனஸ்.
இசை சிகிச்சை தொடங்கி ஆவி ஆராய்ச்சி வரை பல ‘இன்ஃபோ’க்களை அணிகுவகுக்க விட்டது ஆச்சரியத்தை கிளப்பி, பின்னர் அயற்சியை ஏற்படுத்துவது மைனஸ். ஆரம்பத்தில் புது அனுபவங்களைக் கடத்தியது ப்ளஸ் என்றால், போகப் போக டெம்ப்ளேட் கதைக்குள் இட்டுச் செலவது மைனஸ்.
அமானுஷ்ய பின்புலத்தில் திகிலூட்ட துணைபுரிந்த கேமரா, கச்சிதமான எடிட்டிங், பின்னணி இசையின் முக்கியப் பங்களிப்பு, படத்துக்கு பக்கபலமாகத் திகழும் ஒலியமைப்பு எல்லாமே ப்ளஸ்தான். எனினும், முதல் பாதியில் ஈர்த்த ‘சப்தம்’, இரண்டாம் பாதியில் சற்றே ஹெவி டோஸ் ஆனது மைனஸ்.
ஒட்டுமொத்தமாக, அறிவழகனின் ‘ஈரம்’ படம் அளவுக்கு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுபூர்வ அம்சங்கள் இல்லை என்றாலும் கூட, பெரிதாக ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தை உறுதியுடன் தருவது ‘சப்தம்’ படத்தின் ப்ளஸ்.