இளையராஜா இம்மாதம் 8-ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், அவரது இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது நடந்த இருவரின் நெகிழ்ச்சியான உரையாடல் கவனம் ஈர்த்துள்ளது.
இளையராஜா உடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக் குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், இளையராஜாவும் முதல்வர் ஸ்டாலினும் அன்பாக பேசிக்கொள்கின்றனர். அப்போது, “ஐயாதான் ‘இசைஞானி’ பட்டம் கொடுத்தார். அதை மாற்றவே முடியவில்லை.” என்று கருணாநிதி குறித்து ஸ்டாலினிடம் நெகிழ்ந்து கூறுகிறார் இளையராஜா. அதற்கு, ‘ஆம், அதுவே நிலைத்துவிட்டது’ என்கிறார் ஸ்டாலின்.
அந்த வீடியோ பின்னணியில் ‘மெளன ராகம்’ படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலின் பேக்ரவுண்ட் ஸ்கோர் இசைக்கப்பட இருவரின் புன்னகை பரிமாறுகின்றனர். “காரில் போகும்போது எப்போதுமே உங்கள் இசையைத்தான் கேட்கிறேன்” என்று இளையராஜாவிடம் சொல்கிறார் ஸ்டாலின். தொடர்ந்து “உங்களுடைய பிறந்தநாள் ஜூன் 3 தான். ஆனால் ஜூன் 2 என்று மாற்றி வைத்துக் கொண்டீர்களே” எனக் கேட்க, “இல்லை, அப்பாவுக்காக” என்றார் இளையராஜா.
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில்… pic.twitter.com/bv9AUVxpl0— M.K.Stalin (@mkstalin) March 2, 2025