Top 5 Cine Bits:தனுஷின் ‘குபேரா’ சிக்கல் முதல் சிம்புவின் ‘ஜெஸ்ஸி’ பகிர்வு வரை!


தனுஷின் ‘குபேரா’ சிக்கல்: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’ இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் தலைப்புக்குத் சிக்கல் வந்துள்ளது. கரிமகொண்டா நரேந்தர் என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர், அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் இதே தலைப்பை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்துள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதே தலைப்பை சேகர் கம்முலா தனது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். அவர் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள கரிமகொண்டா நரேந்தர், இல்லை என்றால், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சுமுகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஸ்வத் இயக்கத்தில் சிம்பு: பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் உட்பட பலர் நடித்து, கடந்த 21-ம் தேதி வெளியான படம், ‘டிராகன்’ . ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தனது அடுத்த படம் குறித்து அப்டேட் பகிர்ந்துள்ள அஸ்வின் மாரிமுத்து, “அடுத்து சிம்பு படத்தை இயக்குகிறேன். அந்தப் படத்திலும் நல்ல மெசேஜ் இருக்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அந்தப் படம் தொடங்கும்” என்றார்.

‘பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமே’ - பிரபல பாடகர் யேசுதாஸுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்தச் செய்தி போலியானது என மறுப்பு தெரிவித்துள்ள அவரது மகன் விஜய் யேசுதாஸ், தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம்: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷ்ன பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாண்டிராஜ் - சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சிம்புவின் ‘ஜெஸ்ஸி’ பகிர்வு - ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நடிகர் சிம்பு வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் வெளியாகும்போது பெரும் வெற்றியடைய வைத்தீர்கள். 2-ம் வெளியீட்டிலும் நல்ல வரவேற்பு. அது ஒரு மேஜிக்கல் படம். கவுதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், மனோஜ் பரமஹம்சா சார், த்ரிஷா மேடம், தயாரிப்பாளர் விடிவி கணேஷ் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி. இப்போது எல்லாம் உள்ளுக்குள் ஜெஸ்ஸி... ஜெஸ்ஸி என சொல்வதில்லை. வேறு சொல்கிறது. விரைவில் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

x