மோகன் ஜியின் ‘திரெளபதி 2’: வரலாற்றுச் சிறப்பு என்ன?


சென்னை: தனது அடுத்த படமாக ‘திரெளபதி’ 2-ம் பாகத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் மோகன்.ஜி.

‘திரெளபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய கூட்டணி மோகன் ஜி - ரிச்சர்ட் ரிஷி. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ‘திரெளபதி 2’-ல் பணிபுரியவுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி மற்றும் ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இதன் கதை 14-ஆம் நூற்றாண்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைப் பற்றிய கதையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திரெளபதி 2’ குறித்து மோகன் ஜி, “படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மும்பை, ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இதற்கு முன்பு எங்கும் பார்த்திராத இடங்களில் மொத்த படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த வருட முடிவுக்குள் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

‘திரௌபதி 2’ திரைப்படம் 14-ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்” என்றார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரியவுள்ளார். ரிச்சர்ட் ரிஷி உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

x