டிராகன் பார்த்து கலங்கிய ஷங்கர்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘டிராகன்’ படம் பார்த்துவிட்டு கருத்துப் பதிந்துள்ள இயக்குநர் ஷங்கர், “அற்புதமான படம் ‘டிராகன்’. அருமையான திரைக்கதை. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள். அனைத்து கதாபாத்திரங்களுமே அற்புதமாக முழுமையாக இருந்தது. பிரதீப் ரங்கநாதன் மீண்டும் அற்புதமான பொழுதுபோக்கு திறமையைக் காட்டியிருக்கிறார். மேலும், வலுவான நடிகராகவும் நிரூபித்திருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் மனதில் நிற்கும் நடிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அனைத்து GenZ கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருந்தார்கள். கடைசி 20 நிமிடக் காட்சிகளை பார்த்து கண் கலங்கிவிட்டேன். மோசடிகள் அதிமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் மிகவும் தேவையான செய்தியைக் கூறியிருக்கிறார்கள். ஏஜிஎஸ் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் படங்களின் அணிவகுப்பு: நடிகர் ரவி மோகன், “வேல்ஸ் நிறுவனத்தில் எனது அடுத்த படமான ‘ஜீனி’ தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். ‘பராசக்தி’ படத்தில் எனது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அது ஒரு நல்ல குழு. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு இலங்கை செல்லவுள்ளோம்.
‘கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும்” என்று தனது படங்களின் அப்டேட் குறித்து விவரித்துள்ளார்.
ஆமிர்கான் - பிரதீப் ரங்கநாதன் சந்திப்பு: சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ்டுடே’ படத்தின் இந்தி ரீமேக் வெளியானது. ‘லவ்யப்பா’ என்ற பெயரில் வெளியான இப்படத்தில் ஆமிர்கானின் மகனும், ஸ்ரீதேவியின் 2-வது மகளும் நடித்திருந்தார்கள். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தச் சூழலில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆமிர்கானை பிரதீப் ரங்கநாதன் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து “நான் எப்போதும் சொல்வது போல், வாழ்க்கை எப்போதும் எதிர்பாராதது. உங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு நன்றி ஆமிர்கான் சார். அந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்: தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் நேற்று முன்தினம் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.
அஜித்தின் கார் விபத்துக்குள்ளாகும்போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “அஜித்தின் விடாமுயற்சி வலிமை மிக்கது. எந்தவித காயமும் இன்றி வெளியே வந்தார். ரேஸில் அவர் மீண்டும் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறைவு: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பியன் வினோத், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கவுள்ளன. விரைவில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளது படக்குழு.