மீண்டும் ‘டிராகன்’ கூட்டணி: ‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைவது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறும்போது, “ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். எஸ்.டி.ஆர் 51 முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும். எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது.
நம்பிக்கை என்பதில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘டிராகன்’ படம் பார்த்துவிட்டு அடுத்த படத்தின் வாய்ப்பை தரவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதத்தை வைத்துக் கொடுத்தார்கள். சொன்ன நேரம், பொருட்செலவு எல்லாமே அதற்கு காரணம். எஸ்.டி.ஆர் 51 உருவானது அப்படிதான்” என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி - விஜய் சேதுபதி கூட்டணி: இயக்குநர் கிருத்திகா உதயநிதி தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் கிருத்திகா உதயநிதி - விஜய் சேதுபதி கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
‘தக் லைஃப்’ கதாபாத்திரம் எப்படி? - ‘தக் லைஃப்’ ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “நான் திரும்ப மணிரத்னம் சாரை சந்திக்க வேண்டாமா? என்ன சார் கஷ்டப்பட்டு எடிட் எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறேன். எடிட்டே இல்லாமல் மொத்த கதையையும் தட்டிவிட்டீர்களே என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும். அந்தப் படம் பார்த்தீர்கள் என்றாலும் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது. அவர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர்தான்” என்று பதிலளித்தார்.
பிரீத்தி ஜிந்தா புலம்பல்: நடிகை பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “தற்போது சமூக வலைதளங்கள் பெருகி விட்டன. அதேபோல் சமூக வலைதளங்களில் நச்சுத்தன்மையும் பெருகிவிட்டது. இது எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஒருவரை ட்ரோல் செய்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குள் இருக்கிற இழிவுத்தன்மையை சமூக வலைதளங்கள் வழியாக காட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் நாம் பிரதமரைப் பாராட்டிப் பேசினால், உடனடியாக அவருடைய பக்தர் என முத்திரை குத்தப்படுகிறார். இது சரியான விஷயம் அல்ல. மக்கள் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும். மக்களின் உண்மையான முகம்தான் சரியான விஷயம்” என்று கூறியுள்ளார்.
Chhaava வசூல் என்ன? - மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்திப் படம், ‘ச்சாவா’ (Chhaava). சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கவுசல், அவர் மனைவியாக ராஷ்மிகா மந்தனா, அவுரங்கசீப்பாக அக்ஷய் கன்னா உட்பட பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பிப்.14-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வசூல் குவித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் இந்தப் படம் ரூ.270 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.