Top 5 Cine Bits - ‘பைசன் காளமாடன்’ முதல் ‘மரகத நாணயம் 2’ அப்டேட் வரை!


‘பைசன் காளமாடன்’ ஷூட்டிங் நிறைவு: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பாஃப்டா விருது அள்ளிய ‘கான்கிளேவ்’ - பாஃப்டா எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள், ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. 78-வது பாஃப்டா விருது வழங்கும் விழா லண்டனில், சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது. இதில் எட்வர்டு பெர்கர் இயக்கிய ‘கான்கிளேவ்’, சிறந்த படம், சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 விருதுகளை வென்றது.

அதேபோல், ‘தி புருடலிஸ்ட்’ படமும் சிறந்த நடிகர் (ஆட்ரியன் பிராடி), சிறந்த இயக்குநர் (பிராடி கோர்பெட்), சிறந்த இசை (டேனியல் ப்ளம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லோல் க்ராலி) ஆகிய 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை ‘அனோரா’ படத்துக்காக மைக்கி மேடிசன் வென்றார்.

‘கேங்ஸ்டர்’ செந்தில்: நகைச்சுவை நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் என பலர் நடிக்கும் இந்தப் படத்தை பிஎம்எஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில் முரளி பிரபாகரன் தயாரிக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். நாற்காலியில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார்? என்பது கதை. நரேஷ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.முத்து ஒளிப்பதிவு செய்கிறார்.

கிருத்திகா படத்தில் விஜய் சேதுபதி? - ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது ’காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப் படத்தின் நடித்து முடித்துள்ளார். ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெய்ன்’ உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதியின் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘மரகத நாணயம் 2’ அப்டேட்: ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’. 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் ஆதி அளித்த பேட்டி ஒன்றில், “மரகத நாணயம் 2-ஐ விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் பாக குழுவினருடன், இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள். முதல் கதை சிறியதாக இருந்தது, 2-ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். முதல் பாகத்தில் எப்படி பொறுப்புடன் பணிபுரிந்தோமோ, அதேபோல், 2-ம் பாகத்திலும் பணிபுரியவுள்ளோம். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

x