திருச்சி வேம்பூர் எனும் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. பரிதி. தனது மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறை எடுக்க இருக்கும் நிலையில், பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரிதிக்கு வருகிறது. இறந்தது யார் என விசாரித்து கொண்டிருக்கும்போதே சடலத்தில் இருந்த தலை காணாமல் போகிறது. தலையின் தேடலுக்கு இடையில் அப்பகுதி எம்எல்ஏவின் மைத்துனரும் கொலையாகி கிடக்கிறார்.
இந்த இரண்டு கொலைகளும் ஏன் நடந்தன, கொலையாளி யார், அந்த தலை எப்படி காணாமல் போனது என்ற கேள்விகளுக்கு விடையை தேடுவதுதான் ‘விலங்கு’ வெப் சீரிஸின் கதையும் களமும்.
மொத்தம் 7 எபிசோடுகள். வேம்பூர் போலீஸ் ஸ்டேஷன், அதன் காவலர்கள், கைதிகள், அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகள் என நிதானமாக தொடங்கும் முதல் எபிசோட் திரில்லர் வெப் சீரிஸுக்கே உரித்தான ஒரு பரபரப்பான மர்மங்களுடன் முடிகிறது. ஒவ்வொரு எபிசோடும் இதே பரபரப்பை முடிவாக கொண்டுள்ளன.
போலீஸ் எஸ்.ஐ பரிதியாக விமல் கச்சிதமாக நடித்துள்ளார். அதேபோல் அதிக கவனம் பெறுபவர்கள் பாலசரவணன் மற்றும் புதுமுக நடிகர் ரவி. ஒளிப்பதிவு, எடிட்டிங், என தொழில்நுட்ப பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
வில்லனின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்தாமல், அவர் எங்கிருந்து வருகிறார், ஏன் அவர் சட்டவிரோதமாக மாறுகிறார் என்பது போன்ற காட்சிகள் விலங்கின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. க்ரைம் - திரில்லர் தொடராக இருந்தாலும், அதனுள் வட்டார மக்களின் கலாச்சாரங்கள், பேச்சுவழக்குகளை முழுக்க பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்துள்ளது.
குறிப்பாக, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக காட்டப்பட்டுள்ள காட்சிகள், தமிழக காவல்துறையில் இருக்கும் சாதிய அடிப்படையிலான தகவல்களை ரியால்ட்டிக்கு ஏற்றாற்போல் கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
சுவாரஸ்யமான திரைக்கதையுடன் தமிழில் தாகம் தீர்க்கும் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸை தந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். 2022-ல் வெளியான இந்த வெப் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம். >>ட்ரெய்லர் வீடியோ