நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவி, அதர்வா, லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பீரியட் படமான இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை லட்சுமி மூவிஸ் சார்பில் என். லட்சுமி பிரசாத் தயாரிக்கிறார். இதில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டைட்டில் டீஸர், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியானது.
இந்தப் படத்துக்கு ‘மதராஸி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு ‘மதராஸி’ படத்தின் படப்படிப்பைத் தொடர்வார் என்று தெரிகிறது. இதே தலைப்பில் அர்ஜுன், வேதிகா, கஜாலா நடித்து 2006-ம் ஆண்டு ஒரு படம் வெளியானது.
இதற்கிடையே சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படக்குழுவினர் படப்பிடிப்புத் தள வீடியோவை வெளியிட்டுள்ளனர்.