Top 5 Cine Bits: சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ முதல் பார்வதியின் மன உறுதி வரை!


சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமலேயே சுமார் 90% படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘மதராஸி’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தில் வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

‘குடும்பஸ்தான்’ மெகா வசூல்: மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்குமே நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக போகாததால் பல திரையரங்குகளில் ‘குடும்பஸ்தன்’ மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.25 கோடியை தாண்டுவதும் உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் என அனைத்துமே விற்பனையாகிவிட்டதால், தயாரிப்பாளருக்கு ‘குடும்பஸ்தன்’ மூலம் நல்ல லாபம் என்கின்றனர் வர்த்தகர்கள்.

சிவகார்த்திகேயனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து: சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி பதிலளிக்க உத்தரவு: ‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்வதியின் மன உறுதி: நடிகை பார்வதி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மலையாள சினிமாவில் பெண்களுக்கான கூட்டமைப்பு உருவாவதற்கு முன், நான் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுவந்தேன். என்னைச் சுற்றி பலர் இருந்தார்கள். செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். ஆனால், அந்த கூட்டமைப்பு உருவான பின், சர்ச்சைகள் எழுந்தன. அதற்குப் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டன.

என் குரலை ஒடுக்குவதற்கான வழியாக வாய்ப்புகளை வழங்காமல் இருந்தார்கள். வாய்ப்பு கொடுக்காவிட்டால் நான் அமைதியாகி விடுவேன் என நினைத்தார்கள். என்னுடன் ஏற்கெனவே பணியாற்றியவர்களும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகுதான் தன்னம்பிக்கை கொண்டவளாக மாறினேன்” என்று மன உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

x