பழசை மறக்காத சூரி! - திருச்சியில் ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி, ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தனர் சில ஊழியர்கள். அதனை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சூரி. “சுவர்களில் நிறங்களை பதித்தேன் - இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகராகும் முன்பு பல்வேறு வேலைகளில் இருந்துள்ளதையே அவர் இந்தப் பதிவின் மூலம் நினைவுகூர்ந்துள்ளார்.
10 படங்கள் ரிலீஸ்: பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் வெளியாக உள்ளன. கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, ஃபயர், காதல் என்பது பொதுவுடைமை, அது வாங்கினால் இது இலவசம், தினசரி, படவா, கண் நீரா, 9 ஏஎம் 9 பிஎம், டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகவும் வாய்ப்பு உள்ளது.
‘அரசியலுக்கு முழுக்கு’ - சிரஞ்சீவி: ‘பிரம்மா ஆனந்தம்’ பட பிரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் இருந்து விலகியிருக்கவே போகிறேன். அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு திரைப்படத் துறைக்கான தேவைகளுக்காக மட்டுமே. அரசியலில் இருந்து விலகி இனி சினிமாவில் மட்டுமே என் முழு கவனம் இருக்கும். மீண்டும் அரசியலுக்கு வரவிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், என் ரசிகர்களுக்காகவும் படங்களுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன். எனது இலக்குகள் அனைத்துமே பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்” என்றார்.
‘சங்கராந்திக்கி வஸ்துணம் 2’ உறுதி: அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்த படம் ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’. இதன் வெற்றி விழாவில் பேசும்போது அனில் ரவிப்புடி உடன் மீண்டும் இணையவுள்ளதாகவும், ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ படத்தின் இரண்டாம் பாகமாக அது இருக்கும் எனவும் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அந்தப் படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
‘டிராகன்’ இயக்குநர் விளக்கம் ‘டிராகன்’ படத்தின் ட்ரெய்லரை பலரும் ‘டான்’ படத்துடன் ஓப்பிடுகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “டான் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அதே படத்தை யாரேனும் திரும்ப எடுப்பார்களா?. ‘ஓ மை கடவுளே’ என்ற மக்களுக்கு பிடித்த படத்தை இயக்கியவன் நான். பிரதீப் ரங்கநாதனோ ‘லவ் டுடே’ என்ற ரூ.100 கோடி வசூல் கொண்ட படத்தை இயக்கி நடித்தவர். நாங்கள் இணைந்து ஏன் ‘டான் 2’ எடுக்கப் போகிறோம்?
கல்லூரி, நிறைய மாணவர்கள், கலர்ஃபுல்லான காட்சிகள் என பார்க்கும்போது ‘டான்’ மாதிரி தெரிகிறது. அப்படத்தின் கதை என்ன, கல்லூரியில் அராஜமாக இருக்கும் ஒருத்தன் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறான் என்பதுதான். ஆனால் ‘டிராகன்’ கதை அதுவல்ல. படத்தில் பெரிய சர்ப்ரைஸ் ஒன்று உள்ளது. அதை படத்தின் ட்ரெய்லரில் இருந்து மறைத்துவிட்டோம்.
டிராகன் படம் வெளியான உடன் இப்படி பேசிய அனைவருமே மாற்றிப் பேசுவார்கள். ‘ஓ மை கடவுளே’ எப்படி வித்தியாசமாக இருந்ததோ, அதே மாதிரிதான் ‘டிராகன்’ படமும் வித்தியாசமாக இருக்கும். அடுத்த சிம்பு படத்தின் கதையும் வித்தியாசமானது தான்” என்று தெரிவித்துள்ளார்.