மதுரை: தொன்மையையும், சமகால வரலாற்றையும் தெரிந்து கொண்டால்தான் புராணங்களை வரலாறாக ஆக்கும் கூட்டத்தை அறிந்து கொள்ள முடியும் என வேண்டும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் இன்று பேசினார்.
மதுரையில் இன்று பிரண்ட்ஸ் ஆஃப் ஹெரிடேஜ் சைட்ஸ் சார்பில் தமிழி சூல் மாமதுரை எனும் தலைப்பில் மாங்குளம் மீனாட்சிபுரம் தமிழி கல்வெட்டு ஆவணப்பட வெளியீட்டு விழா லைக்கோ அரங்கில் நடைபெற்றது. இதற்கு எழுத்தாளர் சுப்பாராவ் தலைமை வகித்தார். அதன் ஒருங்கிணைப்பாளர் ரமா கிருஷ்ணன் வரவேற்றார். கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மாங்குளம் மீனாட்சிபுரம் தமிழி கல்வெட்டு ஆவணப் படத்தை வெளியிட்டு திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது: மாங்குளம் மீனாட்சிபுரத்தில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழி கல்வெட்டு 2300 ஆண்டுகள் பழமையானது என்ற தொன்மையான வரலாற்றையும், அது தமிழ் செம்மொழி தகுதி பெற உதவியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் சமகால வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த ஊர்க்காரர்களுக்கும் இல்லாத குணம் மதுரைக்காரர்களுக்கு உண்டு. சென்னை போன்ற ஊர்களில் ஒரு சாலையில் இருவர் சண்டையிட்டால் அந்த ஊர் அதன் போக்கில் இயங்கும். ஆனால் மதுரையில் சாலையில் இருவர் சண்டையிட்டால் ஊர் ஸ்தம்பித்துவிடும். சண்டையிடுபவர்களின் பிரச்சினையில் அனைவரின் கவனமும் இருக்கும். சண்டையிடுவோரின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்ப்பு சொல்லி தீர்த்து வைக்கும் நல்ல குணம் உண்டு.
சிலர் திருப்பரங்குன்றத்தை, அயோத்தியைப் போல் நினைத்து இங்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது தெரியாமல் மதுரையில் கையை வைத்து விட்டோமே என நினைத்து கிளம்பும் அளவுக்கு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். மதுரையில் உள்ள ஆளுமைகளை முன்னிறுத்தினாலே போதும், வெளியிலிருந்து வருபவர்களால் பிரச்சினை இருக்காது. நற் சிந்தனையுள்ளவர்கள் ஒன்று கூட வேண்டும்.
நம்மிடம் உள்ள வரலாற்று ஆதாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இப்போது புராணங்களை எல்லாம் வரலாறுகளாக திரித்து கூறும் காலகட்டத்தில் வாழ்கிறோம். புராணம் என்பது கதை. கல்வெட்டு என்பது வரலாற்று ஆதாரம். புராணம் வரலாறு ஆகாது. புராணத்தை வரலாறு என்று ஆக்குவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அவ்வாறு தொல்காப்பியனுக்கு முந்தியவன் அகத்தியன் என ஆக்கப் பார்க்கிறார்கள்.
ராமாயணம் என்பது கதை. அதை வரலாறு ஆக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்று கதை எது, வரலாறு எது என்பதை தெரிந்து கொள்ள தொன்மை வரலாற்றையும், சமகால வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். சங்க காலப் புலவர்களுக்கு இடமளித்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். கோயிலிலுள்ள 63 நாயன்மார்கள் என்பது கதை, புராணம்.
அது வரலாறு இல்லை. தற்போது கதை சொல்கிறவர்கள் நிறைய பேர் வந்துவிட்டனர். எனவே உண்மை வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மதுரையை சுற்றியிருக்கிற கல்வெட்டு ஆதாரங்ளை ஆவணப் படங்களாக்கி வெளியிட வேண்டும், என்றார். இதில் தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம், வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர். முடிவில், நிறுவனத் தலைவர் ஷர்மிளா தேவதாஸ் நன்றி கூறினார்.