பிப்.28-ல் வெளியாகும் ‘சுழல்’ சீசன் 2-ன் சிறப்பு என்ன?


ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன், பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகிறது.

சமூகத்தில் ஓய்வில்லாமல் தொடர்ந்து சுழன்றுகொண்டேயிருக்கும் ஓர் அவலத்தை அழுத்தமான த்ரில்லர் கதையின் மூலம் சொல்லவரும் படைப்புதான் அமேசான் பிரைம் வீடியோவில் 2022-ல் வெளியான ‘சுழல்’ வெப் தொடர்.

பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ ரெட்டி, இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடருக்கு கிடைத்த வரவேற்பின் தாக்கமாக தற்போது சீசன் 2 உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது என்கிறது இந்த வெப் சீரிஸின் குழு.

புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ள இந்தத் தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கி இருக்கிறார்கள். குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லராக இதனை உருவாக்கி இருக்கிறார்களாம்.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிப்ரவரி 28-ம் தேதி ‘சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2’ இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

x