திருப்பதியில் கார்த்தி முதல் தனுஷ் Vs பிரதீப் ரங்கநாதன் வரை | Top 5 Cine Bits


திருப்பதியில் கார்த்தி சாமி தரிசனம்: திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி. அப்போது அங்கிருந்த பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். “மகன் பிறந்த பிறகு திருப்பதிக்கு வரவே இல்லை. ஆகையால் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தது நன்றாக இருந்தது. அடுத்து ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’ படங்கள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார் கார்த்தி.

இது கோபி - சுதாகரின் படம்: ‘பரிதாபங்கள்’ கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடித்து, தயாரித்துள்ள படத்துக்கு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அதன் அறிமுக டீஸரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் கமர்ஷியல் ஃபேன்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் ஆகும். ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது படக்குழு.

இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி - சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விடிடி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

ரோகிணி உணர்வுபூர்வ பேச்சு: வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் பேசிய ரோகிணி, “சில படத்துலதான் ரொம்ப சரியாக நடித்துள்ளேன் எனத் திருப்தியாக இருக்கும். அதில் இந்த லட்சுமி கதாபாத்திரமும் ஒன்று. இது எங்களோட கதை. ஒரு அம்மா - பொண்ணு கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ரசிகர்கள் ரெடியாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். எல்லாத்தையும் விட, பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை செய்துள்ளோம்” என்றார்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்: தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஓர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் படக்குழு உருவாக்கி இருக்கிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் தர்ஷனுடன் நடித்துள்ளார்கள். புதுமுக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

தனுஷ் உடன் போட்டியா? - பிப்ரவரி 21-ம் தேதி தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. சென்னையில் ‘டிராகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதீப் ரங்கநாதனிடம் தனுஷ் உடன் போட்டியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “போட்டி எல்லாம் இல்லை. அந்த மாதிரி தேதிகள் அமைந்து விட்டன. பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடுவதாக இருந்தோம். ஆனால், விடாமுயற்சி வெளியீட்டால் நல்ல திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 21-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றினோம். அதே காரணத்திற்காகவே ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழுவினரும் மாற்றியிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

x