மாதவன் நடிப்பில் உருவாகும் ‘ஜி.டி.நாயுடு’ பயோபிக் இம்மாதம் தொடங்கப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜி.டி. நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா’ படத்தில் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்கவுள்ளார்.
மாதவன் நடிப்பில் வெளியான ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தினை தொடர்ந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைகின்றன.
ஜி.டி. நாயுடு பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கும் விதத்தில் அரங்குகள் அல்லாமல் உண்மையான இடத்திலேயே படமாக்க உள்ளது படக்குழு. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கமலநாதன் பணிபுரியவுள்ளார்.
‘ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா’ படம் முன்னதாக அறிவிக்கப்பட்டாலும் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. மேலும், படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் வகையில் படக்குழு தயாராக இருக்கிறது.
பிப்ரவரி 18-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், மாதவனுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.