Top 5 Cine Bits: பார்வதி நாயர் திருமணம் முதல் அப்பாஸ் 2.0 வரை


பார்வதி நாயர் திருமணம்: நடிகை பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் இன்று (பிப்.10) சென்னை - திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. இந்தக் காதல் தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘ஆலம்பனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மம்மூட்டி - நயன்தாரா காம்போ: மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ உள்ளிட்ட சில படங்களில் மம்மூட்டி - நயன்தாரா கூட்டணி இணைந்து நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ‘MMMN’ என்று தற்காலிகமாக தலைப்பிட்டுள்ளது.

அசோக் செல்வன் அடுத்தப் படம்‘: போர் தொழில்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா. இவர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கான கதையை எழுதியுள்ளார். அசோக் செல்வன் ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். அசோக் செல்வனின் 23-வது படமான இதை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்குகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

பான் வேர்ல்டு ‘டாக்சிக்’ - கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம். இதில் ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

ஹாலிவுட்டிலும் ‘டாக்சிக்’ படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதையொட்டி, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஒரு முறை ஆங்கிலத்திலும், இன்னொரு முறை கன்னடத்திலும் படமாக்குகிறார்கள். இதனால் படப்பிடிப்பு செலவும் அதிமாகி இருக்கிறது. காரணம், இப்படம் பான் வேர்ல்டு சினிமாவாக வெளியாகப் போகிறது.

அப்பாஸ் 2.0 - முன்னாள் ரொமான்டிக் ஹீரோ அப்பாஸ் மீண்டும் திரைக்கு வருகிறார். புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக புஷ்கர் - காயத்ரி வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்கள். இதனை சற்குணம் இயக்கவுள்ளார். இந்த வெப் தொடரில்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அப்பாஸ்.

x