Top 5 Cine Bits: தப்பித்த ‘விடாமுயற்சி’ முதல் பூஜா ஹெக்டே பூரிப்பு வரை


தப்பித்த ‘விடாமுயற்சி’: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு, தற்போது ரிலீஸான ‘தண்டேல்’, ‘லவ்யப்பா’, ‘பேட்ஏஸ் ரவிகுமார்’ உள்ளிட்ட படங்கள் வெளியான அன்றே இணையத்தில் HD பிரிண்ட் வெளியாகி, படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களின் இந்திப் பதிப்பின் மூலமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அதேவேளையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்தியில் வெளியாகவில்லை. இதனால், அதன் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகாமல் ‘தப்பித்து’ வெறும் தியேட்டர் பிரிண்ட் மட்டும் வெளியானதால் பாதிப்பின் தாக்கம் குறைவு என்கின்றனர். முதல் இரண்டு நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.66 கோடியை ‘விடாமுயற்சி’ வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷால் - சுந்தர்.சி இணையும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் மீண்டும் இணையும் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷால் சம்பளம் மட்டுமே ரூ.30 கோடியாம். இதில் காமெடி ரோலில் நடிக்க சந்தானத்திடம் பேசி வருகின்றனர். அவர் இல்லையேல் வடிவேலு இணைவாராம். பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.அருண்குமார் வழங்க, அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரளத் திரைத் துறை அதிரடி முடிவு: நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.சுரேஷ் குமார் கூறும்போது, “புதிதாக வரும் நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். அவர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 10 சதவிகிதம் கூட தியேட்டரில் வசூல் இல்லை. தயாரிப்புச் செலவு அதிகரிக்கிறது. தொடர்ந்து பல படங்கள் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. ஓடிடி நிறுவனங்கள் அனைத்துப் படங்களையும் வாங்குவதில்லை. இதற்கு ஒரு முடிவை எட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.

‘மார்கோ’ டீமுக்கு சூர்யா பாராட்டு: மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியான இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை மக்கள் கொண்டாடினார்கள். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டது படக்குழு. உலகளவில் ‘மார்கோ’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், சூர்யாவும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் நாயகன் உன்னி முகுந்தன் மற்றும் ஹனிஃப் அடினி ஆகியோருக்கு பூங்கொத்து அனுப்பி தனது வாழ்த்தை பகிர்ந்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே பூரிப்பு: சூர்யாவுடன் தான் நடித்து வரும் ‘ரெட்ரோ’ படம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறும்போது, “நான் நடித்துள்ள அனைத்துப் படங்களும் எனக்குப் பெருமையானவைதான். ஆனால், ‘ரெட்ரோ’ நான் அதிகமாகப் பெருமை கொள்ளும் படம். அந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்புகிறேன். ‘ரெட்ரோ’வை படமாக்கிய விதம் படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவம் சிறப்பாக அமைந்தது. என் கதாபாத்திரம் அதில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் பார்க்காமலேயே இதை நான் சொல்கிறேன். இப்போது எடிட்டிங் பணி போய்க் கொண்டிருக்கிறது” என்றார் பூரிப்புடன்.

x