சென்னை: அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அஜித் - த்ரிஷா தம்பதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிய முடிவு செய்கின்றனர். அந்தச் சூழலில், காணாமல் போகும் த்ரிஷாவை அஜித் தேடும் ‘விடாமுயற்சி’யே திரைக்கதை.
+ இது வழக்கமான அஜித் படம் அல்ல. முதல் காட்சியிலேயே எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலப்பறையோ, பில்டப்போ இல்லாமல் மிக மிக சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் அஜித். பில்டப்களை வலிந்து திணிக்காத தனித்துவமே மிக முக்கிய பாசிட்டிவ் அம்சம்.
+ முதல் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்றே உணர்வைத் தருகிறது. அஜர்பைஜானில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம்.
+ ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என எந்த இடத்திலும் மிகைத்தன்மை இல்லாமல் கொண்டு சென்றது மிகச் சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் தவிர இடைவேளை ட்விஸ்ட் வரை படம் விறுவிறுப்பாகவே செல்கிறது.
+ ஆரவ் மற்றும் அஜித் இடையிலான காட்சிகள், அதன் பிறகு அர்ஜுன், ரெஜினா அறிமுகம், அவர்களின் பின்னணி என அடுத்தடுத்து வரும் காட்சிகள், திரைக்கதையை பில்டப் செய்ய உதவுகின்றன.
- ஆனால், இரண்டாம் பாதியில்தான் பிரச்சினையே. இடைவேளை ட்விஸ்டை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே உடைத்தது மைனஸ். இதனால் பார்வையாளர்களின் ஆர்வம் குறைந்துவிடுகிறது.
- அஜித்தின் தேடல் காட்சிகள் பலவும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில், திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுத்துவது நெகட்டிவ் அம்சம்.
- த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஓரிரண்டு புத்திசாலித்தனமான காட்சிகளைத்தான். ஆனால், அதெல்லாம் ‘விடாமுயற்சி’யில் இருப்பதாகவே தெரியவில்லை.
+ அஜித்துக்கு ஒரு நடிகராக இது புதிய பரிமாணம். கமர்ஷியல் அம்சங்களை இல்லாமல் நடிப்பதற்கான இடங்கள் அதிகம். அவற்றை கச்சிதமாக பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
+ நடிப்பில் மட்டுமின்றி, மூன்று விதமான ‘கிளாஸ்’ ஆன லுக்கில் ரசிகர்களை ஈர்க்கிறார் அஜித்.
- த்ரிஷா வரும் காட்சிகள் வெகு குறைவு. அவருக்கு பெரிதாக வேலை இல்லை என்பது ஏமாற்றமே.
+ அர்ஜுன் தனது பங்கை சிறப்பாக் செய்திருக்கிறார். ரெஜினா, ஆரவ் ஆகியோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
+ புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கும் ஓம் பிரகாஷின் கேமராதான் ‘விடாமுயற்சி’க்கு பெரும் பலம்.
- அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படியே இருந்தாலும், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.
- ஆக்ஷன் காட்சிகள் சில இடங்களில் வியக்கவைத்தாலும், அஜித் - அர்ஜுன் மோதல் காட்சிகள் எல்லாம் பெரிதாக ட்ரீட் தரவில்லை.
விறுவிறுப்பான முதல் பாதிதான் பாசிட்டிவ் என்றால், ஜவ்வாக இழுக்கப்படும் இரண்டாம் பாதிதான் ‘விடாமுயற்சி’யின் நெகட்டிவ்.