சென்னை: ‘பேர்ட் கேர்ள்’ (Bird Girl) படத்தின் காட்சிகள் பிராமண சமுதாயத்தை இழிவாகச் சித்திரித்தப்பதாக தமிழ்நாடு பிராமண சமாஜம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவர் நா.ஹரிஹரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சிகள் (டீசர்) சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படத்தில் பிராமண சமுதாயத்தை இழிவாகச் சித்திரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய நியாயச் சட்டம் (பாரத நியாய சம்ஹிதா), குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் (போக்சோ) சட்டம் போன்ற சட்டங்களின்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுடன் எவ்விதமான பாலியல் ரீதியான நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். இத்திரைப்படத்தின் கதை, இளம் தலைமுறையினர் அனைவரையும் சட்டத்துக்குப் புறம்பாக, இத்தகைய செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமை ஆகாது. இத்தகைய திரைப்படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினர்களுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், தணிக்கை குழு அளித்த அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதற்கு உண்டான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பிராமண சமாஜம் மேற்கொள்ளும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.