சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம்.
அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கு 'சக்தித் திருமகன்' என தமிழில் தலைப்பு வைத்துள்ளனர். இதே படத்துக்குத் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளுக்கு 'பராசக்தி' என தலைப்பு வைத்தனர். சிவகார்த்திகேயன் படமும் மற்ற மொழிகளில் வெளியாக இருப்பதால் டைட்டில் சர்ச்சை எழுந்தது.
விஜய் ஆண்டனி, 'பராசக்தி' என்ற தலைப்பைப் பதிவு செய்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். ஏவி.எம் நிறுவனம் தங்களிடமுள்ள 'பராசக்தி' தலைப்பை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு அளித்ததாக வாழ்த்து தெரிவித்தது. இதனால் ‘பராசக்தி’ யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனும் விஜய் ஆண்டனியும் சந்தித்து பிரச்சினையை சுமுகமாக முடித்துக்கொண்டனர்.
இந்நிலையில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1952-ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “1952-ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்கள் தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார். ஏவி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது. விரைவில் 75-வது ஆண்டை காண இருக்கும் வேளையில், பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களுக்கு முழு உரிமையான ‘பராசக்தி’ படத்தின் பெயரை வேறு யாரும் திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.