லக்னோ - டெல்லி ரயில் பெட்டி சம்பவம் தொடர்பாக பொய் பரப்பியவர்கள் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் வலியுறுத்தி இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்து வெளியேறினர். அப்போது அந்த வழியாக சென்ற பெங்களூர் - டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்வள் மீது மோதியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜி.வி.பிரகாஷ், “லக்னோ - டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15-க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பொய்ச் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படம் என்ன என்பதை இன்னும் ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்யவில்லை.