'பராசக்தி' என்ற பெயரில் மீண்டும் திரைப்படமா? - சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம்


சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் சூட்டியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. ‘பராசக்தி’ என்ற பெயரை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிவாஜி சமூக நலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பராசக்தி இது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952-க்கு முன் -1952-க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய "பராசக்தி" திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது.

ஒரு யுகக் கலைஞனாக, கலை உலகின் தவப்புதல்வனாக, கருணாநிதியின் புரட்சிகர வசனங்களை, தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டுசேர்த்த, நடிகர் சிவாஜி கணேசனை, தமிழ் திரையுலகம், கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் "பராசக்தி".

தமிழ்த் திரையுலகுக்கு இப்போது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை? கதைப் பஞ்சம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துள்ள பல பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைக்கிறார்கள். இப்போது, படத் தலைப்பிற்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? ஏற்கனவே பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, ”மீண்டும் பராசக்தி” என்ற பெயரில் அந்தத் திரைப்படம் வெளியானது.

தற்போது மீண்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு "பராசக்தி" என்று பெயர் சூட்டியிருப்பது லட்சோசோப லட்சம் நடிகர் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வேண்டும் என்றே தமிழ்த் திரையுலக வரலாற்றை சிதைக்க முற்படும் இந்த போக்கிற்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

"பராசக்தி" என்ற பெயரை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக் குழுவினரை கேட்டுக்கொள்கிறோம். பராசக்தி என்ற பெயரை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x