சென்னை: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மதகஜராஜா’. பொங்கல் பண்டிகைக்கு வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது, “எனக்கு தெரிந்து எந்த என்னுடைய எந்த படத்திற்கும் நான் சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. கடைசியாக ஹிட் ஆன ‘அரண்மனை4’ படம் உட்பட என் படம் வெளியான பின்பு அடுத்த படத்திற்கு அப்படியே நகர்ந்து விடுவேன். ஆனால் இந்த படம் அதை எல்லாவற்றையும் மீறிய ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இது ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து இந்த படம் வருகிறது. என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறது என்று கூட திரையுலகில் சிலர் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் இந்த படத்தை நாங்கள் அறிவித்த சமயத்திலேயே எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது.
இந்த படம் வெற்றி பெறும் என நான் நம்பினேன். ஆனால் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் படம் பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும் தான். இந்த படத்தில் நடித்த மணிவண்ணன் சார், மனோபாலா, 13 வருடங்கள் கழித்தும் கூட இப்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வரும் இந்த படத்தின் கதாநாயகிகளான அஞ்சலி, வரலட்சுமி ஆகட்டும் அனைவருக்கும் நன்றி. வரலட்சுமி கடைசி நேரத்தில் தான் இந்த படத்திற்குள்ளே வந்தார். முதலில் வேறு கதாநாயகி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் ஒரு வாரம் தள்ளித்தான் வர முடியும் என்கிற சூழல். முதல் நாள் திடீரென வரலட்சுமியை அழைத்து விஷயம் சொன்னதும் உடனே கிளம்பி வந்தார். ’கலகலப்பு’, ’மதகஜராஜா’ என என்னுடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்த ராசியான ஹீரோயின் அஞ்சலி. கார்த்திக், விஷால் போன்ற ஹீரோக்கள் என்னை முழுமூச்சாக நம்பி தங்களை ஒப்படைத்து விடுவார்கள்.
சந்தானமும் நானும் எனது பல படங்களில் பணியாற்றி இருக்கிறோம். இந்த படத்திற்காக 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்து நடித்தார். விஜய் ஆண்டனி சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். வானமாமலை என்பவர் எழுதிய புத்தகத்திலிருந்து தூய தமிழ் வார்த்தைகளை எடுத்து இதில் பயன்படுத்தியிருந்தோம். அதேபோல சிக்குபுக்கு ரயிலு வண்டி பாடல் இதில் வந்ததே சுவாரசியமான விஷயம். விஜய் ஆண்டனியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் வேறு ஒரு படத்திற்காக உருவாக்கி அவர்கள் வேண்டாம் என்று சொன்ன அந்த பாடலை போட்டு காட்டினார். அற்புதமாக இருந்தது. இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன். இப்போது எல்லா திருவிழாவிலும் இந்தப்பாடல் ஒலிக்காத இடமே கிடையாது என்பது போல இவ்வளவு பெரிய ஹிட் ஆகிவிட்டது.
இந்த படத்திற்காக விஷால் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் காரில் எல்லாம் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இப்போது இந்த படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி, நாம் உண்மையாக, நேர்மையாக முழு உழைப்பை கொடுத்தால் மக்கள் நமக்கு திருப்பி அன்பை கொடுப்பார்கள் என்பதற்கு விஷாலின் உழைப்பும் மிகப்பெரிய உதாரணம். விஷாலின் மார்க்கெட் இப்போது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த படத்தின் வெற்றி என் தம்பி விஷாலுக்கு மிகப்பெரிய மருந்தாக அமைந்துள்ளது.
நான் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகன். காலையில் கண்விழித்ததுமே ஏதோ ஒரு இடத்தில் அவரது புகைப்படமோ அல்லது போஸ்டரோ பார்த்தால் அல்லது அவரது பாடலை எங்கேயாவது கேட்டால் அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு இருக்கிறது. அவருடைய பெயரை இந்த படத்திற்கு வைத்ததாலோ என்னவோ அவருடைய ஆசிர்வாதமும் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துள்ளது” என்றார்.