சென்னை: நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நேற்று முன் தினம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே இது திருட்டு சம்பவத்திற்காக நடந்ததா அல்லது கொலை முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறு இடங்களில் கத்திக்குத்து வாங்கியுள்ள சைஃப் அலிகான் மும்பை, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அபாயக்கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். தாக்கப்பட்டு முப்பது மணி நேரத்திற்கும் மேலான நிலையில் மும்பை காவல்துறையினர் சந்தேகப்படக்கூடிய ஒருவரை விசாரணைக்காக இன்று பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் தாக்கலுக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.