நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து: கரீனா கபூர்கான் சொல்வது என்ன?


சென்னை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு நேற்று இரவு கத்திக்குத்து நடந்திருக்கிறது. இதுகுறித்தும் சைஃப் அலிகானின் உடல்நலன் பற்றியும் கரீனா கபூர் அணி தெளிவுப்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே இது திருட்டு சம்பவத்திற்காக நடந்ததா அல்லது கொலை முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறு இடங்களில் கத்திக்குத்து வாங்கியுள்ள சைஃப் அலிகான் மும்பை, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் அணி விளக்கம் கொடுத்திருப்பதாவது, ‘சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் வீட்டில் நேற்று இரவு திருட்டு சம்பவம் நடந்தது. இதில் சைஃப் அலிகானுக்கு கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்கள் நலமுடன் உள்ளனர். காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருவதால் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் மேற்கொண்டு எதையும் யூகிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x