'தருணம்’ படத்தின் ஸ்கிரீனிங் நிறுத்தி வைப்பு - மீண்டும் வெளியாகுமென அறிவிப்பு!


சென்னை: கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான ‘தருணம்’ படத்தின் ஸ்கிரீனிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர்கள் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தருணம்’ படம். படம் வெளியாகி ஒரு நாள் ஆகியிருக்கும் நிலையில், படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படும் எனச் சொல்லி இதன் ஸ்கிரீனிங்கை நிறுத்தி வைத்திருக்கிறது படக்குழு.

இதுகுறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, ’எங்கள் 'தருணம்' திரைப்படம் நேற்று (14.01.2025) பொங்கல் வெளியீடாக வந்ததை அறிந்திருப்பீர்கள். எங்கள் தரப்பில் சென்சார் பெருவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தினை வெளியிட இயலவில்லை. மேலும் தமிழகம் தாண்டியும், வெளிநாடுகளிலும் தனிக்கை செய்து இப்படத்தினை வெளியிடுவதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை.

இதுவரை படத்தினை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்த நிலையில், இப்படம் மற்றொரு தேதியில் வெளியானால் இன்னும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியும் எனவும், அதன்மூலம் அதிக அளவிலான ரசிகர்களையும் கவர முடியும் எனவும் திரையரங்கு தரப்பிலிருந்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை பல தரப்பினரும் எங்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது'தருணம்' திரைப்படத்தின் விமர்சனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதையுன் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஊடக நண்பர்களிடம் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

எனவே அனைவரின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கு பின் எங்கள் படத்தினை மற்றொரு தேதியில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து வெளியீட்டு தேதியை கூடிய விரைவில் அறிவிப்போம்' எனத் தெரிவித்துள்ளனர்.

x