சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் நாவலான ‘வாடிவாசல்’ படத்தைத் தழுவி எடுக்கப்படும் படம்தான் ‘வாடிவாசல்’.இதனை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க சூர்யா அதில் நடிக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டே படம் குறித்தான அறிவிப்பு வெளியானது. வாடிவாசல் அமைத்து காளைகளுடன் சூர்யா இருக்கும்படியான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்காகவே இரண்டு காளைகளை தன் வீட்டில் வளர்த்து பயிற்சி எடுத்து பழகி வருகிறார் சூர்யா. பின்பு, வெற்றிமாறன் ‘விடுதலை2’ படத்திலும் சூர்யா ‘கங்குவா’ படத்திலும் பிஸியானதால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இப்போது இரண்டு படங்களும் வெளியாகி விட்டதால் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார். அதில் சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது’ எனக் கூறியுள்ளார். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025