சென்னை: இனி என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் ரவி மோகன் என்று கூப்பிடுங்கள் என ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கியதற்கு சினிமாவிற்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன். இந்த நாள் தொடங்கி நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு வரும் நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது. என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும் ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எனது ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ’ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை’யாக மாற்றப்படுகிறது. எனது புதிய பயணத்தில் உங்களது தொடர்ச்சியான ஆதரவுக்கு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.