சென்னை: தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிலிம் நகரில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை நந்தகுமார் என்பவருக்கு நடிகர் ராணா குடும்பம் குத்தகைக்கு விட்டிருக்கிறது. அந்த இடத்தில் நந்தா டெக்கான் கிச்சன் என்ற ஹோட்டலை நந்தகுமார் நடத்தி வருகிறார். இதனால், ராணா டகுபதி குடும்பத்தாருக்கும் நந்தகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ராணா குடும்பம் அவரிடம் குத்தகைக்கு விட்ட நிலத்தைத் திரும்பி கேட்க இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், குத்தகை நிலத்தில் இருந்த ஹோட்டலை ராணா குடும்பத்தினர் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியுனர். இதனால், தனக்கு ரூ. 20 கோடி வரையிலும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நந்தகுமார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் ஹைதராபாத் காவல்துறையினர் ராணா மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராணா மற்றும் நந்தகுமாருக்கு இடையே இந்த குத்தகை ஹோட்டல் தொடர்பான பிரச்சினை கடந்த சில மாதங்களாகவே நீடித்த நிலையில், ராணாவின் மீது வழக்கு பதிந்துள்ள செயல் பேசுபொருளாகியுள்ளது.