சென்னை: பாடல்களுக்கு மட்டுமே ரூ. 75 கோடி செலவு, ’இந்தியன்2’ படத்துக்குப் பிறகு வரும் ஷங்கர் படம், ’ஜெண்டில்மேன்’, ’முதல்வன்’ படம் போன்ற உணர்வு தந்த டிரெய்லர் என ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் கொட்டிக் கிடந்தது. அதை படம் திருப்தி செய்திருக்கிறதா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தியின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லாமல் போக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கொலை செய்து விடுகிறார் பதவி மோகம் பிடித்த மகன் மோப்பி தேவி (எஸ்.ஜே.சூர்யா). அப்பா இறந்ததும் அந்த பதவி தனக்குதான் என நினைத்து கொண்டிருப்பவருக்கு எதிர்பாராதவிதமாக இறப்பதற்கு முன்பே சத்யமூர்த்தி முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்றும், தன் கட்சியின் வாரிசு என்றும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான ராமை (ராம் சரண்) வீடியோ மூலம் அறிவித்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் எஸ்.ஜே. சூர்யா, ராம் சரண் முதல்வராகக் கூடாது என அவரை எதிர்க்கிறார். இறந்து போன முதல்வர் ஏன் ராம்சரணை முதல்வராக அறிவித்தார்? அவருக்கும் ராம்சரணுக்கும் என்ன தொடர்பு? ராம்சரண்- எஸ்.சூர்யா மோதல் என்ன ஆனது? இதெல்லாம்தான் ’கேம் சேஞ்சர்’ படத்தின் கதை.
பார்த்து பழகின ஷங்கர் படத்தின் கதைதான் ‘கேம் சேஞ்சர்’. கதை தன்னை சுற்றிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து மொத்தமாக தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் ராம்சரண். ஐஏஎஸ் அதிகாரி, அப்பண்ணா என அப்பா- மகன் இரண்டு கதாபாத்திரங்களிலும் சின்சியரான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். படத்தின் மற்றொரு ஹீரோ இசையமைப்பாளர் தமன். ராம் சரணுக்கான பில்டப் காட்சிகள், ஆக்ஷன் என அனைத்தையும் இவரது இசை தூக்கி நிறுத்துகிறது. குறிப்பாக, தோப் மற்றும் பேட்ட ராப் ஸ்டைலில் அமைந்திருக்கும் ஒரு பாடலும் ரசிக்க வைக்கிறது.
தனது வழக்கமான வில்லத்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. கோபத்தில் எந்நேரமும் கொந்தளிக்கும்படியான கதாபத்திரமே தவிர்த்து அவரது கதாபாத்திரம் வலுவானதாக இல்லை. சுனில் மற்றும் ஜெய்ராமுடைய கதாபாத்திரங்கள் சிரிப்புக்கு கியாரண்டி. கமர்ஷியல் படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி இரண்டு பாடல்களுக்கும் தேவையான கவர்ச்சியும் காட்டி செல்கிறார். அவரை விட வலுவான கதாபாத்திரம் அஞ்சலிக்கு. சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரமும் முழுமையடையாத உணர்வைத் தருகிறது.
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பதற்கேற்ப ஒவ்வொரு காட்சியிலும் பாடல்களிலும் புரொடக்ஷன் வேல்யூ நன்றாக இருக்கிறது. இருந்தாலும் ஐஏஎஸ், அப்படிங்கற அந்த டேக்குக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு சீன்லையும் பாட்டுலையும் புரொடக்ஷன் வேல்யூ குறையில்லாமல் இருக்கு. இருந்தாலும் ஐஏஎஸ், மினிஸ்டர், சி.எம். வேட்பாளர் என பலரும் ஏதோ ஹவர் சைக்கிளை வாடகைக்கு எடுத்தது போல ஹெலிகாப்டரிலேயே வந்து போவது டூ மச்.
ஊழல் இல்லாத நாடு என்ற தன் அப்பா கண்ட கணவனை நனவாக்க, ஐஏஎஸ் அதிகாரியான மகன் ராம்சரண் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை எப்படி களை எடுக்கிறார் என்பதுதான் ’கேம் சேஞ்சர்’ படத்தின் ஒன்லைன். இந்த பாயிண்ட்டை பிடிக்க நாம் இடைவேளை வரை காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது. அதுவரை முதல் பாதி முழுக்கவே பில்டப், ஆக்ஷன், பாட்டு என நம் பொறுமையை சோதிக்கிறது. இடைவேளைக்கு பின் வரும் ஃபிளாஷ்பேக் காட்சி ஆறுதல். பின்பு ராம்சரண் vs எஸ்.ஜே. சூர்யா என நகரும் கதையின் முடிவு என்ன என்பதை குழந்தை கூட சொல்லி விடும். ஆனாலும், பில்டப்- ஆக்ஷன் என இழுவையாக கதை நகர்கிறது.
தெலுங்கு பார்வையாளர்களை மட்டுமே டார்கெட் செய்து படம் எடுத்திருக்கிறார் ஷங்கர். லிப் சிங் பிரச்சினைகளும் இருக்கிறது. முதல்முறையே பார்க்கும்போதே அஞ்சலிக்கு தன்னுடைய மகனை அடையாளம் தெரியவில்லையா, ராம்சரணை எப்படி இறந்த முதல்வர் கண்டுபிடித்தார், முதல்வர் செய்த தவறை அவ்வளவு நல்லவராக இருக்கும் சமுத்திரக்கனி ஏன் கேட்கவில்லை என்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை. ஆக மொத்தத்தில் ’கேம்சேஞ்சர்’ பார்வையாளர்களை பஞ்சர் ஆக்கியிருக்கிறது.