சென்னை: சினிமாவை விட்டு விலக நினைத்தேன் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, நித்யா மேனன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் நித்யா மேனன். அதில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்ததாகக் கூறியிருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது, “நடனம், பாட்டு, நடிப்பு என சிறுவயதில் இருந்தே இந்த விஷயங்களை செய்வதற்கு என் அம்மாதான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்பார். ஆனால், எனக்கு சினிமா என்றால் சுத்தமாகப் பிடிக்காது. அதையும் தாண்டி இத்தனை வருடங்கள் படங்கள் நடித்து விட்டேன்.
அதனால், நடித்தது போதும் சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்று நினைத்தபோதுதான் கடவுள் எனக்கு லஞ்சம் கொடுத்தார். அதாவது, ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அப்போதுதான் நான் சினிமாவை விட்டாலும் சினிமா என்னை விடாது என்று புரிந்தது” என்று பேசியிருக்கிறார்.