தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை ஹனி ரோஸ்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன், “தொழிலதிபர் ஒருவரின் வணிக நிறுவனத் திறப்பு மற்றும் சில நிகழ்ச்சி களுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியதை ஏற்க முடியவில்லை. பிறகு அவர் நிறுவன நிகழ்ச்சிகளுக்குச் செல்ல மறுத்துவிட்டேன்.
ஆனால், அவர் தொடர்ந்து எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் செயல், பழிவாங்குவது போல் இருக்கிறது. ஒருவர் வசதி
யானவர் என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று தொழிலதிபரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருந்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது எர்ணாகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ஹனி ரோஸ், “அவரை போலவே பேசிவரும் மற்றவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். உங்கள் செல்வத்தின் பலத்தை நீங்கள் நம்புகையில் நான் சட்டத்தை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போலீஸில் புகார் அளித்த பின் பேசிய ஹனி ரோஸ், “இரண்டு மாதங்களுக்கு முன் விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. என் குடும்பத்தினரும் நானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.