‘மதகஜராஜாவில் என் ஃபேவரைட் காமெடி’ - இயக்குநர் சுந்தர்.சி தகவல்


விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மதகஜராஜா’. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். 12 வருடத்துக்கு முன் உருவான இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இயக்குநர் சுந்தர்.சி கூறும்போது, “இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இத்தனை வருடம் தாமதம் ஆனாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும் போது இயக்குநராக சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்றுதான் ஆரம்பித்தோம். அந்த பொங்கல் மிஸ் ஆனாலும் இந்தப் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான கொண் டாட்டமான படமாக இது இருக்கும். இதில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் 15 நிமிட காட்சி இருக்கிறது. என் படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்பேன்.

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சந்தானம் என்னுடன் பணியாற்றி இருந்தார். அதில் வெறும் 5, 6 நாட்கள் தான் நடித்திருந்தார். இதில் படம் முழுவதும் வரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப் படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். நடிகர் ஆர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்” என்றார். விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு உட்பட படக்குழுவினர் பேசினர்.

நடிகர் விஷாலுக்கு சிகிச்சை: விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, அவரது கை, கால்கள் நடுங்கின. விழாவில் பங்கேற்றவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சோபாவில் விஜய் ஆண்டனி, சுந்தர்.சியுடன் அவரை அமர சொல்லி, நிகழ்ச்சியை கலந்துரையாடலாக மாற்றினார் நிகழ்ச்சி தொகுப்பாளர். விஷாலின் உடல்நிலைக் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் விஷாலுக்கு கடும் காய்ச்சல் என்றும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனியார் மருத்துவமனை ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x