சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைத்து தெரிவித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் மூலவர் சண்முகர் சத்ரு சம்ஹார மூர்த்தி பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, ”மழை வெள்ளம் எச்சரிக்கை இருந்ததால் தாமதமாக கோயிலுக்கு வந்துள்ளேன். ஒரே நாளில் அறுபடை வீடுகளில் உள்ள முருகனை தரிசனம் செய்ய நீண்ட நாள் ஆசை முதலில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு அடுத்தடுத்து மற்ற கோவிலுக்கு செல்ல உள்ளேன்.
எப்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தாலும் பாசிட்டிவாக இருக்கும். ’அமரன்’ வெற்றிக்கு நன்றி தெரிவிப்பது முக்கிய கடமையாக உள்ளது. மேலும் பல வேண்டுதல்களை வைத்துள்ளேன். கோயிலுக்கு வந்தது மிகவும் திருப்தியாக இருந்தது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும்” என்றார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கேட்டதற்கு, “இதைப் பற்றி இங்கே பேச வேண்டாம் வேறு இடத்தில் பேசிக் கொள்ளலாம். இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய நினைப்பும். காவல்துறை நடவடிக்கை சரியாக உள்ளது. இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட பெண் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்களுக்கு தைரியம் வேண்டும். இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.