ஜீவா, அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம், ‘அகத்தியா’. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷி கன்னா நாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வாம் இண்டியா அனீஸ் தேவ் இணை தயாரிப்பு செய்துள்ளார். ஃபேன்டஸி ஹாரர் த்ரில்லரான இந்தப் படம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் பற்றி நடிகர் ஜீவா கூறும்போது, “இதுபோன்ற படத்தில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். நிஜவாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காக கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதை சொன்னபோது, இதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக புதிய உலகுக்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும்” என்றார்.