சென்னை: நடிகை சீதாவின் தாயார் காலமானார்.
'ஆண் பாவம்’, ‘புதிய பாதை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை சீதா. இவருக்கும் நடிகர், இயக்குநர் பார்த்திபனுக்கும் திருமணம் முடிந்து அபிநயா, கீர்த்தனா, ராக்கி என மூன்று குழந்தைகள் உள்ளனர். சீதா- பார்த்திபன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சினிமா, சீரியல், வீட்டுத்தோட்டம் என பிஸியாக வலம் வரும் நடிகை சீதாவின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். விருகம்பாக்கத்தில் தனது தாயாருடன் சீதா வசித்து வந்தார். தன் அம்மாவின் புகைப்படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘இன்று காலை எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் இறைவனடி சேர்ந்தார்’ எனப் பதிவிட்டிருக்கிறார். சீதாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.