சென்னை: விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்திருக்கும் ‘நேசிப்பாயா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் அதிதியிடம் உங்கள் அப்பா, இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்துடன் உங்கள் படமும் போட்டியாக வெளியாகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். நிச்சயம் அப்பா படத்திற்கு போட்டி என்று நினைக்கவில்லை. பொங்கல் விடுமுறையில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வதற்கு இன்னும் ஒரு நல்ல படம் என்றுதான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், ““இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணு வர்தன் சாருக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் சார் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்” என்றார்.