ரசிகர்களுக்கு நடிகர் யஷ் வேண்டுகோள்!


நடிகர் யாஷ், கீது மோகன் தாஸ் இயக்கும் ‘த டாக்ஸிக்’, நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு வரும் 8-ம் தேதி பிறந்த நாள். இதை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புதிய சிந்தனை, தீர்மானங்கள் மற்றும் புதிய திட்டத்தை உருவாக்குவதற்கான நேரமாக இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. பல ஆண்டுகளாக என் மீது நீங்கள் பொழியும் அன்பு அற்புதமானது.

ஆனால் சில அசம்பாவித சம்பவங்களும் நடந்திருக்கின்றன. நாம் நம் அன்பை வெளிப்படுத்தும் மொழியை மாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது. குறிப்பாக என் பிறந்த நாளுக்கு உங்கள் அன்பின் வெளிப்பாடு ஆடம்பரமாகவோ, கூட்டம் கூடி கொண்டாடுவதாக இருக்கக் கூடாது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதும் உங்கள் இலக்குகளை அடைவதும், மகிழ்ச்சியை பரப்புவதும்தான் எனக்கு சிறந்த பரிசு. என் பிறந்தநாளில் படப்பிடிப்பில் இருப்பேன். இருந்தாலும் உங்கள் வாழ்த்துகளின் அரவணைப்பு என்னை வந்தடையும். இவ்வாறு யாஷ் கூறியுள்ளார்.

x