தனது மூன்று படங்களின் குழுவினர் மீது பவன் கல்யாண் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் பவன் கல்யாண். துணை முதலமைச்சர் ஆகும் முன்பு ‘உஸ்தாத் பகத் சிங்’, ‘ஓஜி’ மற்றும் ‘ஹரி ஹர வீர மல்லு’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பும் நடைபெறவே இல்லை.
இது தொடர்பான கேள்விக்கு பவன் கல்யாண், “நான் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வேலை செய்வேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருந்தேன். ஆனால் 3 படங்களை எடுப்பவர்களும் அதற்கான முன்னேற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை. நான் உறுதியளித்ததை விட அதிக நாட்கள் வேலை செய்திருக்கிறேன். ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை இன்னும் தயாராகவில்லை. அதுதான் தாமதத்துக்கு முக்கியக் காரணம். ‘ஓஜி’ குழுவுக்கு நான் அழுத்தம் தந்தேன். என்னால்தான் அந்த படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நான் இல்லாத காட்சிகள் அத்தனையையும் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்.
‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தைப் பொறுத்தவரை இன்னும் 8-9 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண். இதில் ‘ஹரி ஹர வீர மல்லு’ படமே முதலில் மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.