திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக எதிர்மறை கதாநாயகன் இருந்தால்தான் திரைக்கதை சுவாரஸ்யமாக அமையும். அப்படி இந்த வருடம் 2024ல் சினிமாவில் எதிர்மறை கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சில நடிகர்களை பார்க்கலாம்:
’கல்கி 2898 AD’: நீண்ட நாட்கள் கழித்து எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் ‘கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் வெளியானது. அறிவியல் -புராண கதையாக உருவான இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ. 1200 கோடி வரை வசூல் செய்தது. படத்தின் வில்லன் கமல்ஹாசன் என்றாலும் படத்தில் மொத்தம் இரண்டே காட்சிகளில் குறிப்பாக கிளைமாக்ஸில் வந்து வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.
’தி கோட்’: டி -ஏஜிங், சிவகார்த்திகேயன் கேமியோ, த்ரிஷா நடனம், நடிகர்களின் அணிவகுப்பு, இரட்டை வேடத்தில் விஜய் என வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் ’தி கோட்’. இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. காந்தி மற்றும் ஜீவன் என அப்பா- மகன் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். இதில் ஜீவன் கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பால் வில்லத்தனத்தில் தெறிக்கவிட்டார் விஜய்.
’மகாராஜா’: சிறுமிகளின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’மகாராஜா’. ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் ரூ.190 கோடி வசூலை ஈட்டியது. இதில் வில்லனாக அனுராக் காஷ்யப் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார்.
’கருடன்’: நியாத்துக்கும் உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பவனாக நடிகர் சூரியின் நடிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’கருடன்’. ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.44 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படத்தின் வில்லனாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
’விடுதலை2’: இயக்குநர் வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 2024 டிசம்பர் மாதம் விடுதலை இரண்டாம் பாகம் வெளியானது. பெருமாள் வாத்தியராக விஜய் சேதுபதியும், ஹீரோவாக சூரியும் நடித்துள்ளனர்.மோசமான குணம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாகவும் சேத்தன் தன் நடிப்பால் மிரட்டி கவனம் ஈர்த்தார்.