சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!


சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவருக்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனால், கடந்த 2020ல் அவர் சென்னை, பூந்தமல்லியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஹேமந்துடன் நடிகை சித்ரா தங்கியிருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணத்தில், ஹேமந்த் மீது சந்தேகம் உள்ளதாக சித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டு பின்னர் 2021ல் ஜாமீனில் வெளியே வந்தார். சமீபத்தில் அவர் நிரபராதி என அறிவித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்தும் விடுவித்தது.

இந்த நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ், மகள் சித்ரா இறந்ததில் இருந்தே மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் இன்று காலை திருவான்மியூரில் இருந்த அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x