’வணங்கான்’ படத்தால் சூர்யாவுடன் சண்டையா என்ற கேள்விக்கு இயக்குநர் பாலா பதிலளித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பாலா ‘வணங்கான்’ படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமானார். முதல் கட்டப் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் நடிப்பது மட்டுமல்லாது, தயாரிக்கவும் செய்தார் சூர்யா.
‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படத்தை ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திடீரென ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
சூர்யா- பாலாவுக்கு இடையிலான ஈகோ கிளாஷ் தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் இதுபற்றி இருவருமே பொதுவெளியில் உறுதிப்படுத்தவில்லை. பின்னர், அருண்விஜயை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்த பாலா அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை வெளியிட தயாராகி விட்டார். சூர்யா- பாலா இடையில் சண்டை என செய்தி வெளியானாலும் ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாலா மீதான மரியாதையை வெளிப்படுத்தினார் சூர்யா.
’வணங்கான்’ படத்திற்காக பாலா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யா விலகியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எங்கள் இருவருக்கும் பிரச்சினை என்ற செய்தி உண்மையில்லை. அவரை வைத்து பொதுவெளியில் படம் எடுப்பது கடினமாக இருந்தது. கூட்டம் கூடியது. அதனால் இருவரும் சுமுகமாக பேசியே பிரிந்தோம். நிச்சயம் அடுத்தப் படத்தில் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.