மலையாள திரைத்துறைக்கு ரூ.700 கோடி நஷ்டம்: ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க கோரிக்கை


மலையாள திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக சிறந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. வித்தியாசமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான காட்சி அமைப்பு கள் மூலம் அந்தப் படங்களுக்கு மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், 2024-ம் ஆண்டில் கேரள சினிமாத்துறை ரூ.650 முதல் ரூ.700 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாக அம்மாநில திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இச்சங்கத்தின் செயலாளர் பி.ராகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த வருடம் மலையாளத்தில், 5 ரீ- ரிலீஸ் திரைப்படங்கள் உட்பட 204 படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் தயாரிப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. வெறும் 26 படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில், வெற்றி, பிரம்மாண்ட வெற்றி, சுமாரான வெற்றி ஆகியவையும் அடங்கும். கடந்த வருடத்தை விட 2024-ல் ஐந்து திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டியிருக்கின்றன. பான் இந்தியா முறையில் வெளியான படங்கள் மற்ற மொழிகளில் நல்ல வசூலைக் கொடுத்தாலும் கேரளாவில் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்த வருடம் ரூ.350 கோடி மட்டுமே மலையாளத் திரைத்துறையுலகுக்கு லாபமாகக் கிடைத்துள்ளது. ரூ.650 முதல் ரு.700 கோடி வரை நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த நஷ்டத்தை போக்க வேண்டும் என்றால், முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை விடுத்து வருகிறோம். அவர்கள் செவி சாய்க்கவில்லை. இது தொடர்ந்தால் கேரளத் திரைப்படத்துறை பெரும் சிக்கலை எதிர்கொள்ளும். இவ்வாறு ராகேஷ் தெரிவித்துள்ளார்.

x