சென்னை: நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, தேமுதிக அலுவலகத்தில் கட்சி தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டது. இந்த பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி தேமுதிகவினர் இந்த அமைதி பேரணியை பிரேமலதா தலைமையில் நடத்தியுள்ளனர். விஜயகாந்த் நினைவுதினத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அஞ்சலி குறிப்பு பகிர்ந்துள்ளார். அதில், ‘என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி’ எனக் கூறியிருக்கிறார்.